மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வினியோகம்
சேலம் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 500 உடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்வதற்கு வசதியாக ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.
சேலம்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்த பரிசு தொகுப்பு வருகிற 4-ந் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பெறுவதற்காக ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து சிரமப்படுவதை தடுக்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி சேலம் மாவட்டத்தில் அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் 9 லட்சத்து 92 ஆயிரத்து 350 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் சேலம் மாநகரில் அரிசிபாளையம், பள்ளப்பட்டி, மணக்காடு, அழகாபுரம் மற்றும் அனைத்து பகுதியிலும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கினர்.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் கடை எண், கடையின் பெயர், அட்டை எண், ரேஷன்கார்டுதாரரின் பெயர், பொருட்கள் வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். தினமும் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், வருகிற 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் ஒரு சில இடங்களில் நேற்று காலை பொதுமக்கள் திரளாக வந்து பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் நாங்களே வீடு, வீடாக வந்து டோக்கன் வழங்குகிறோம், 4-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை டோக்கன் வாரியாக பெற்று கொள்ளுங்கள் என தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 427 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில், 9 லட்சத்து 92 ஆயிரத்து 380 அரிசி பெறும் கார்டுகளும், 42 ஆயிரத்து 33 சர்க்கரை கார்டுகளும், 3,014 எந்த பொருளும் வேண்டாம் என்ற கார்டுகளும் அடங்கும். இதனிடையே, சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற கடந்த 4-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதில், சேலம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 439 பேர் ஆன்லைனில் சர்க்கரை ரேஷன்கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்ற விண்ணப்பித்துள்ளனர். அதன்படி தகுதியின் அடிப்படையில் 15 ஆயிரத்து 234 பேரின் கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதனால் மாவட்டம் முழுவதும் அரிசி கார்டுகள் எண்ணிக்கை 10 லட்சத்து 7 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.