சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ரூ.30 லட்சத்தில் 407 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மெகராஜ் வழங்கினார்
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 407 பயனாளிகளுக்கு ரூ.30.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மெகராஜ் வழங்கினார்.
நாமக்கல்,
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட 407 பயனாளிகளுக்கு ரூ.30.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மெகராஜ் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:- சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு அம்மா தாய்சேய் நல பெட்டகமும், 20 உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருச்சக்கரங்களுக்கான ஆணைகளும், வேளாண்மை துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் ஸ்பிரேயர்களும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கொல்லிமலை, தெம்பளத்தில் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டதோடு, வருவாய் துறையின் சார்பில் 216 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றுகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 10 பயனாளிகளுக்கு வட்டியில்லா பயிர்கடனும், ரூ.7 லட்சம் மதிப்பில் வட்டியில்லா மத்திய கால கடன்களும் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் கொல்லிமலை வட்டம் திண்ணனூர்நாடு மற்றும் திருப்புளிநாடு ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 139 பயனாளிகளுக்கு ரூ.17.49 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவதோடு, கைகளை நன்கு சோப்பு மற்றும் கிருமிநாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் கொல்லிமலை ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கர்ணன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருதபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பிரகா, கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் ஜெயவேல், கோவிந்தராஜன், ரவி, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் முத்துலிங்கராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் வடிவேல், கூட்டுறவு சங்க செயலாளர் மகேந்திரன், தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.