சேந்தமங்கலம் தொகுதியில் ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டிடங்கள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
பழையபாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட திறப்பு விழா நடந்தது.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பழையபாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டை குமார், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ், எருமப்பட்டி ஒன்றிய குழு தலைவர் (பொறுப்பு) லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அந்தக கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- பழைய பாளையத்தில் அம்மா கிளினிக் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது முதல் கட்டமாக அரசு நாமக்கல் மாவட்டத்திற்கு 58 அம்மா மினி கிளினிக்குகள் ஒதுக்கியுள்ளது. மேலும் கூடுதலாக கிளினிக்குகளின் எண்ணிக்கை கேட்டுள்ளோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந் தேதி சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
முன்னதாக அமைச்சர் தங்கமணி பெருமாபட்டி ஊராட்சியில் ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அத்துடன் ரெட்டிப்பட்டி அண்ணாநகரில் அ.தி.மு.க கொடி ஏற்றிவைத்து திறந்த வேனில் நின்றவாறு பொதுமக்களிடையே பேசினார். அலங்காநத்தம் ஊராட்சியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம், பொட்டிரெட்டிபட்டி, முட்டாஞ்செட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழு கட்டிடங்களையும், தேவராயபுரம், வரகூர் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடங்களையும் திறந்துவைத்தார். மொத்தம் 7 ஊராட்சியில் ரூ.2 கோடியே 31 லட்சத்து 390 மதிப்பிலான கட்டிடங்களை அமைச்சர் தங்கமணி நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில் கொல்லிமலை ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி, எருமப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பூமதி வரதராஜன், பழையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கிருஷ்ணமூர்த்தி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் முருகேசன், பால்வளத்துறை பொது மேலாளர் சுந்தரவடிவேல், துணை பொது மேலாளர்கள் முருக செல்வன், சின்னுசாமி, முத்துகாபட்டி பால் சொசைட்டி தலைவர் மாரப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.