மாவட்டத்தில் 1,071 ரேஷன் கடைகள் மூலம் 4,36,839 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் 1,071 ரேஷன் கடைகள் மூலம் 4,36,,839 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா தெரிவித்தார்.

Update: 2020-12-27 16:28 GMT
தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை ஒரு துணிப்பையுடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் 1,071 ரேஷன் கடைகள் மூலம் 4,36,839 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.

இந்த பரிசு தொகுப்பை மாவட்டத்திலுள்ள 1,071 ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 13-ந்தேதி வழங்கப்படும்.

நகராட்சி பகுதிகளில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிக்காக கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை வருகிற 30-ந்தேதிக்குள் வீடு தேடிச் சென்று வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்