தொழில்துறை குறித்து மு.க.ஸ்டாலின் முரணான தகவலை கூறி வருகிறார் அமைச்சர் - எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு
தொழில்துறை குறித்து மு.க.ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறி வருவதாக கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர்,
கடலூர் நகராட்சிக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் செலவில் பாதாள சாக்கடை இணைப்புகளில் உள்ள மனிதன் உட்புகும் ஆள் நுழை தொட்டியில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக நவீன எந்திரத்தை வழங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று கடலூர் நகராட்சி பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, ஓ.என்.ஜி.சி. பொது மேலாளர் செபாஸ்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடையில் மனிதன் இறங்கி வேலை பார்க்கும் போது கியாஸ் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலையை போக்கும் வகையில் இந்த எந்திரத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ரூ.45 லட்சம் செலவில் வழங்கி உள்ளது. இனி எந்த துப்புரவு பணியாளர்களும் பாதாள சாக்கடையை கையால் தொடக்கூடாது. ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்கள் பொறியியல் படித்து விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் புதிய, புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். இதேபோல் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்த எந்திரத்தை உருவாக்கிய என்ஜினீயரை பாராட்டுகிறேன் என்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது தொடர்ந்து புகார் கூறி வருகிறார். 2 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளீர்கள். இது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசனும் கேட்டு வருகிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில் அளித்து கூறியதாவது:-
2015-ம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 92 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 48 நிறுவனங்கள் தொழில் துறை சார்ந்தது. மற்றவை மின்சக்தி தொடர்புள்ளவை. தமிழகத்தில் அதிகமான மின் உற்பத்தி இருப்பதால் அவர்கள் வரவில்லை. மீதியுள்ள 74 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி ஏற்றுமதி செய்து வருகின்றன.
பிறகு 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு 302 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 85 சதவீத நிறுவனங்கள் கட்டிடம் கட்டுதல் மற்றும் உற்பத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 28 நிறுவனம் உற்பத்தியை தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பை கொடுத்துள்ளோம்.
இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து உள்ளோம். 2 மாதத்திற்கு ஒரு முறை இந்த குழு கூடுகிறது. இதில் துணை முதல்-அமைச்சர், உள்ளாட்சி, வருவாய்த்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தியா தொழில் மேம்பாட்டு மையம் தமிழக தொழில் வளர்ச்சிக்கு 14-வது இடம் அளித்துள்ளது உண்மைதான். ஆனால் நாம் 92 மதிப்பெண்களை அதில் பெற்றுள்ளோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல் நாம் மோசமான நிலையில் இல்லை. அவர் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். முன்னுக்கு பின் முரணாக கூறுகிறார்.
தமிழக அரசு தொழில் கொள்கை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்ட்வேர் கொள்கை, எலக்ட்ரானிக்ஸ் கொள்கை, தொழில்நுட்ப கொள்கை, வர்த்தகக் கொள்கை, ஒற்றை சாளர அனுமதி, ஆன்லைன் அனுமதி போன்ற தொழில் கொள்கைகளை வகுத்து உடனுக்குடன் அனுமதி வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 32 துறைகள் இணைக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 372 விண்ணப்பங்கள் அனுமதிக்காக வந்துள்ள நிலையில் 12 நிறுவனங்களுக்கான அனுமதி மட்டுமே நிலுவையில் உள்ளது. தொழில் துறை இந்த அரசுக்கு ஒரு மணி மகுடமாக விளங்கி வருகிறது. இது உலகம் அறிந்த உண்மை.
கொரோனா பாதிப்பு காலத்திலும் தமிழகத்தில் ரூ.42 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் சூரியன் மறைந்து விட்டதாக கூறுவதை போல் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, பீகார், மராட்டியம் மாநிலங்களை ஒப்பிடும் போது, நாம் கொரோனா காலத்தில் அதிகமான முதலீட்டை ஈர்த்துள்ளோம். இந்திய அளவில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தான் உள்ளது. இது தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது அப்பட்டமாக பொய். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
பேட்டியின் போது அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், கடலூர் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.