கூடலூரில் ஊசிமலை காட்சிமுனையை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கூடலூரில் ஊசிமலை காட்சிமுனையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Update: 2020-12-27 14:12 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கோரோனா பரவாமல் இருக்க கடந்த 9 மாதங்களாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால், கடந்த 7-ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் இதுவரை திறக்கப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் உயர் அதிகாரிகளிடம் இருந்து அதற்கான உத்தரவு வரவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள ஊசிமலை காட்சிமுனை கடந்த 9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தொலை தூரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காட்சிமுனைக்கு வந்து பசுமையான பள்ளத்தாக்கு பகுதிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

முன்னதாக நுழைவுவாயிலில் கட்டணம் செலுத்தும் இடத்தில் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே அவர்களை வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். இந்த காட்சிமுனையை சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் காட்சிமுனைக்கு செல்ல ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களை பார்வையிட கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோன்று கூடலூர் ஊசிமலை காட்சி முனைக்கு் செல்ல ஒரு நபருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதை பின்பற்றி கூடலூர் ஊசிமலை காட்சிமுனைக்கு செல்வதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 7-ந் தேதி முதல் இதுவரை சுமார் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊசிமலை காட்சிமுனையை கண்டு ரசித்து உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்