பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் அவதி

பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2020-12-27 13:08 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவில் சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, நெல்லியாளம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அதனருகில் உள்ள வனப்பகுதிகளையொட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பந்தலூர், கூடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளிலும், கூடலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். அவர்களுக்கு அரசு அறிவுரைப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் அதுவும் சிக்னல் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சிக்னலுக்காக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் அவர்கள் கட்டாயமாக சிக்னலுக்காக அலைந்து திரிய வேண்டிய அவலம் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

மலைப்பிரதேசம் என்பதால் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதற்கும் சிக்னல் கிடைப்பது இல்லை. அவசர தேவைக்கு செல்போன் மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மேலும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அவதிப்படுகின்றனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், உடனடியாக செல்போன் சிக்னலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்