சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் மையம் கலெக்டர், டி.ஐ.ஜி. ஆய்வு
திண்டுக்கல்லில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஜயலட்சுமி, டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்,
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் வாக்காளர்கள் விரைவாக வாக்களிக்கும் வகையில், அதிக வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவையும் மாவட்ட வாரியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் சட்டசபை தேர்தலுக்காக 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.
இதற்கிடையே திண்டுக்கல் முத்தனம்பட்டி அருகேயுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 7 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், தேர்தல் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.