கம்பம் அருகே சேதமடைந்த பாலத்தால் விபத்து அபாயம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது தேவைக்காக காமயகவுண்டன்பட்டிக்கு அங்குள்ள சின்னவாய்க்கால் பாலம் வழியாக சென்று வருகின்றனர்.
கம்பம்,
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதி அண்ணாபுரம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது தேவைக்காக காமயகவுண்டன்பட்டிக்கு அங்குள்ள சின்னவாய்க்கால் பாலம் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் இந்த பாலம் சேதமடைந்து காணப்படுவதுடன், வலுவிழந்து உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பாலம் இடிந்து விழும் சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த பாலம் இல்லையென்றால் அண்ணாபுரம் பகுதி பொதுமக்கள், கம்பம் வழியாக 10 கி.மீ. சுற்றி தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இதுதவிர விவசாயிகளும் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல அந்த பாலம் தான் முக்கிய வழியாக உள்ளது. நெல் மற்றும் பிற பயிர்கள் அறுவடை காலங்களில் டிராக்டர், லாரி போன்ற வாகனங்கள் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றன. இதற்கிடையே பாலம் இடியும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒருவித அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.