அரசு பள்ளியை நம்பி வரும் மாணவர்களை ஏமாற்றாமல் ஆசிரியர்கள் கல்வி போதிக்க வேண்டும்

அரசு பள்ளியை நம்பி வரும் மாணவர்களை ஏமாற்றாமல் ஆசிரியர்கள் கல்வி போதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார்.

Update: 2020-12-27 05:02 GMT
செய்யாறு,

செய்யாறு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது. முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, செய்யாறு மாவட்டகல்வி அலுவலர் பி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் வி.குமார். தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது கண்ணப்பன் பேசியதாவது:-

சாதித்து காட்டியுள்ளனர்

அரசு பள்ளியில் படிப்பவர் சாதனைப்படைக்க கூடியவர்கள். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தின் கனவு உள்ளத்தில் இருக்கிறது, அதனை எப்படி சாதிக்க வேண்டும் என்கிற வழிகாட்டியாக ஆசிரியர்கள் அமைந்தால் சாதிக்க முடியும். அதனை சாதித்து காட்டியுள்ளனர் இப்பள்ளி மாணவிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற 11 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். 4 பேர் பல்மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். மாவட்ட அளவில் மருத்துவ படிப்புக்கு தேர்வான 11 பேரில் செய்யாறு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாணவிகள் 3 பேர் தேர்வாகியுள்ளனர். புரிசை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் பல்மருத்துவ படிப்புக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். பெற்றோர்கள் நினைத்து கூட பார்த்திருக்க முடியாதபடி மருத்துவர் படிப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

கல்வி போதிக்க வேண்டும்

கல்வி ஒன்று கிராமத்தின், வீட்டின் சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்தை மாற்றும். யாராலும் பறிக்கவோ, திருடவோ, அழிக்க முடியாத செல்வம் கல்வி ஒன்றுதான், பெண்களுக்கு கொடுக்கப்படும் கல்வி ஒரு குடும்பத்திற்கே கல்வி அளித்தாக கருத்தப்படும்.

அரசுப்பள்ளியை நம்பி வரும் குழந்தைகளை ஏமாற்றாமல் ஆசிரியர்கள் கல்வியை போதிக்க வேண்டும். அரசுப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியிலும் புத்துணர்வு பெற்று மிக சிறந்த சாதனை படைக்கக்கூடிய இடமாக மாறும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே புரிதலும், ஈர்ப்பும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசுகையில், கல்வியால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். கல்விதான் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. பொருளாதாரத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துகிறது. மருத்துவம் பயிலும் இந்த மாணவர்கள் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும். இன்று இந்த பள்ளியில் தேர்வான 4 மருத்துவ மாணவர்களுக்கு கல்வி தேவைக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்குகிறேன் என்றார்.

நினைவு பரிசு

விழாவில் சாதனை படைத்த மாணவிகள் யமுனா, சுஜிதா, பவித்ரா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சம்பத், விஜயகுமார், வேதபிரகாஷ், கலைவாணி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்கநாதன், பொருளாளர் ஜனார்த்தனன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடேசன், பொருளாளர் விநாயகம், அ.தி.மு.க நிர்வாகிகள் மகேந்திரன், டி பி.துரை, வே.குணசீலன், வக்கீல் மெய்யப்பன், கோபால், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்