தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ்கோட்டை அருகே கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு

தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ்கோட்டை அருகே கடல் சீற்றத்தால் சேதமடைந்த பகுதிகளை நாகை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார்.

Update: 2020-12-27 03:17 GMT
பொறையாறு,

நிவர் மற்றும் புெரவி புயல்கள் தாக்குதல் காரணமாக ஏற்பட்டகடல் சீற்றத்தால், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையின் அருகே கடல் அரிப்பு அதிகம் ஆகியுள்ளது.

கடந்த மாதம், கோட்டை மதில் சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து, சுமார் 10 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது. மேலும், டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அலை தடுப்பு கருங்கல் சுவர் சமீப புயல்கள் பாதிப்பால் ஏற்பட்ட கடல் அலைகளின் கடும் சீற்றத்தால் சேதமடைந்தது.

இது தவிர, கோட்டை மதில் சுவரையொட்டிஅமைக்கப்பட்டிருந்த முள்வேலி மற்றும் தடுப்பு சுவரும் சேதம் அடைந்தது. எனினும் டேனிஷ் கோட்டை எவ்வித சேதமும் இன்றி தப்பியது. தற்போது மதில் சுவருக்கு மிக அருகே கடல் அலைகள் அடிக்கின்றன. கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டையின் சுவர்களை அலைகள் தாக்கும் நிலை ஏற்படும்.

கலெக்டர் ஆய்வு

டேனிஷ் கோட்டை மற்றும் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் விதமாக உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தரங்கம்பாடி பகுதி மக்கள் நாகை கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, கடல் அரிப்பால் சேதம் அடைந்த பகுதிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் நாகை கலெக்டர் பிரவின் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடல் அலைகள் டேனிஷ் கோட்டையை பாதிக்காத வண்ணம் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை மயிலாடுதுறை செயற்பொறியாளர் தெட்சிணாமூர்த்தி, உதவி பொறியாளர் வீரப்பன், தரங்கம்பாடி தாசில்தார் கோமதி, தாலுகா நில அளவையர் சுகந்தி, தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், நாகை மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்