தகானு அருகே விபத்து திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 33 பேர் காயம்
தகானு அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 33 பேர் காயமடைந்தனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் தகானு தாலுகா பகுதியில் நேற்றுமுன்தினம் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட உறவினர்கள், குடும்பத்தினர் ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். அந்த வேன் சாரானி ரோடு பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த வேன் சாலையில் தாறுமாறாகச் சென்று சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் விபத்தில் சிக்கியவர்கள் உதவி கேட்டு அலறினர். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்
இதில் குழந்தைகள் உள்பட பெண்கள் என சேர்த்து 33 பேர் காயமடைந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த காசா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்சில் ஏற்றி காசாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலரை வாபியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.