பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

பொங்கல் பரிசு தொகுப்பு பெற கரூரில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.;

Update: 2020-12-27 01:01 GMT
கரூர்,

தைப்பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2, 500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற ஜனவரி 4-ந்தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து சிரமப்படுவதை தடுக்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

டோக்கன் வழங்கும் பணி

அதன்படி கரூரில் நேற்று காலை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கரூர், வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், அரிசி அட்டைதாரர்களின் வீடு, வீடாக நேரில் சென்று டோக்கன் வழங்கினர். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் கடையின் பெயர், அட்டை எண், அட்டைதாரரின் பெயர், பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டிருந்தது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனில், வருகிற ஜனவரி 13-ந்தேதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறும்.

மேலும் செய்திகள்