நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா - அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் நிர்பயா திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-12-27 00:09 GMT
சென்னை,

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன், போக்குவரத்து கழக தலைவர் அலுவலக சிறப்பு அலுவலர் ஜோசப் டயஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆவடி மற்றும் அம்பத்தூரில் பணிமனைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சர் மானியக் கோரிக்கையில் தெரிவித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்படுத்துதல், நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர போக்குவரத்துக் கழகப் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி செலவீனங்களை குறைத்தல் மற்றும் உள் மற்றும் வெளிவட்டச் சுற்றுச்சாலையில் மக்களின் தேவையை அறிந்து, அதற்கு ஏற்ப புதிய வழித்தடங்கள் மற்றும் கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

குரோம்பேட்டை பணிமனையில் இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி குறித்து பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பஸ்களை நல்ல முறையில் பராமரிப்பதுடன், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பஸ்களை இயக்குவதன் மூலமாக வருவாயை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதுடன், வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்