திருக்கழுக்குன்றத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி
திருக்கழுக்குன்றத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் இரும்புலிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளர். இவரது மகன் நவீன் (வயது 20). நேற்று காலை நவீன் லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நீலமங்கலம் கிராமத்திற்கு டிராக்டரை ஓட்டிச்சென்றார்.
ஏரிக்கரை அருகில் வயலில் ஏர் ஓட்டி கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் அவர் அதே டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் மகா விஷ்ணு (20), மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் டிசா (13), தட்சிணாமூர்த்தி என்பவரது மகன் ஹரி (20) ஆகியோர் டிராக்டரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று டிராக்டரில் எதிர்பாராத விதமாக பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிராக்டர் நிலை குலைந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டர் ஓட்டி வந்த நவீன் மற்றும் மகாவிஷ்ணு இருவரும் டிராக்டரின் அடியில் சேற்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிசா படுகாயம் அடைந்தார்.
ஹரி அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். தவலறிந்த அணைக்கட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னையா மற்றும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த டிசாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.