நினைவு தினம்: சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பால் ஊற்றி பொதுமக்கள் அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பால் ஊற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு சுற்றுலா பயணிகள், மீனவர்கள் என 13 பேர் சுனாமியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று மாமல்லபுரம் கடற்கரையில் மீனவ கிராம மக்கள் சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மாமல்லபுரம் கடற்கரையில் சுனாமியில் உயிர் நீத்தவர்களின் நினைவாக மீனவ கிராம மக்கள் அங்குள்ள கடற்கரையில் அவர்கள் இறந்த பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பிறகு சுனாமியில் இறந்தவர்களின் நினைவாக மாமல்லபுரம் கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் கடற்கரைக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலரும் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.
சுனாமியில் இறந்தவர்களின் நினைவு தினத்தை துக்க நாளாக அனுசரிக்கும் வகையில் மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் உட்பட கடலோர கிராம மக்களில் ஏராளமானோர் சுனாமியின் கோர தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சோகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், இது போன்ற இறப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கவும் ஆண்டுதோறும் இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கல்பாக்கத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான அணுசக்தி துறை ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட ஏராளமானோர் சுனாமி தினத்தையொட்டி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக கடற்கரைக்கு வந்து வணங்கி செல்வர்.
நேற்று காலை 9 மணியளவில் சதுரங்கப்பட்டினம் டச்சுக் கோட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள சுனாமியில் இறந்தோரின் நினைவுத்தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட அ.தி.மு.க. மீனவரணி செயலாளர் கலியபெருமாள் தலைமையில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. தனபால், மாவட்ட பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், ஒன்றிய செயலாளர்கள் விஜயரங்கன், ராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் வளையம் வைத்து 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடற்கரைக்கு வந்த பெண்கள் குழந்தைகள் உள்பட அனைவரும் கடலில் பால் ஊற்றி வணங்கினர்.