மத்திய இளைஞர் நலத்துறையின் விவேகானந்தர் பிறந்த நாள் விழா போட்டிகள்; மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் பல்வேறு போட்டிகளில் விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-26 23:19 GMT
போட்டிகள்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகளை வருகிற 29 மற்றும் 30-ந் தேதியும், மாநில அளவிலான போட்டிகளை ஜனவரி 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையிலும், தேசிய அளவிலான போட்டிகள் வரும் 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்
மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு போட்டிக்கான நடுவரை நியமித்து மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் வெற்றிபெறும் போட்டியாளர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாநில போட்டிகளில் வெற்றி பெறுபவர் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இளைஞர்கள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த தேசிய அளவிலான போட்டிகளில் தகுதி 15 வயது முதல் 29 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாதோரும் இப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

வீடியோ பதிவு
மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் போட்டிக்கான பதிவினை நல்ல தெளிவான ஒலி, ஒளி அமைப்புடன் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை உறுதிமொழிபடிவத்தில் அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளின் முடிவுகளை அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.

தனிநபர் மற்றும் குழு போட்டிக்கான தேதி மற்றும் கால அளவுகள் அட்டவணை படி நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அட்டவணை
இசை பிரிவில் தனிநபர் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு ஆகியவற்றிற்கு 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. நாட்டுப்பாடல் குழு மற்றும் இந்திய இசை குழு பிரிவிற்கு 8 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. இதில் 4 முதல் 8 நபர்கள் வரை இடம்பெறலாம். நடன பிரிவில் தனிநபர் பரதநாட்டியம் மற்றும் நவீன நடனத்திற்கு 10 நிமிடங்கள் கால அளவாகும்.

நாட்டுப்புற நடனம் மற்றும் நவீன நடனம் குழுவிற்கு 15 நிமிடம் கால அளவாகும். உடையலங்காரம் பிரிவில் பாரம்பரிய உடை மற்றும் நவீன உடை அலங்கார குழுவினருக்கு முறையே 10 மற்றும் 15 நிமிடங்கள் கால அளவாகும். நீதி நாடகத்திற்கு 4 நிமிடம் கால அளவாகும். இதில் நான்கு முதல் எட்டு பேர் வரை இடம்பெறலாம். காட்சிகள் பிரிவில் தனிநபர் ஓவியம் பென்சில் வரைபடம் தயாரித்தல் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்கு ஏற்ற இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆங்கிலத்தில் கட்டுரை
எழுத்தாற்றல் பிரிவில் புதிய இந்தியாவின் உற்சாகம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை மற்றும் கவிதை எழுதலாம்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்