ராமநாதபுரத்தை அடுத்த ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி பேட்டை துள்ளல், ஆராட்டு விழா எளிமையாக நடைபெற்றது.
மண்டல பூஜை
ராமநாதபுரத்தை அடுத்த ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ளது வல்லபை அய்யப்பன் கோவில். சபரிமலை அய்யப்பன் கோவில் போல அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மண்டல பூஜை நிகழ்ச்சியையொட்டி பேட்டை துள்ளல், ஆராட்டு விழா ஆண்டுதோறும் இங்கு விமரிசையாக நடைபெறுவதால் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவது வழக்கம்.
பேட்டை துள்ளல்
இந்த நிலையில் மண்டல பூஜையான நேற்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோபூஜை, கஜ பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து ரெகுநாதபுரம் முத்துநாச்சி அம்மன் கோவிலில் இருந்து பேட்டை துள்ளல் மிக எளிமையாக தொடங்கியது. இதில் அய்யப்ப பக்தர்கள் உடலில் வர்ணம் பூசி ஊர்வலமாக சென்றனர். அதன் பின்னர் குருக்கள் மோகன் குருசாமி தலைமையில் பஸ்ம குளத்தில் அய்யப்ப சாமிக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு 33 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த சாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மோகன் குருசாமி தலைமையில் வல்லபை அய்யப்பா சேவை நிலையம் அறக்கட்டளையினர், அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
கொரோனா பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வழக்கமாக அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ளும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று மிக எளிமையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமியை வழிபட்டு சென்றனர்.
இருமுடி
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒரு புறம், கூட்டத்தை தவிர்க்க குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதி என்ற நிலை உள்ளதால் தென் மாவட்ட மக்கள் அதிகமானோர் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலுக்கு வந்து இருமுடி செலுத்தி அய்யப்பனை வழிபட்டு செல்கின்றனர்.