நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
காளையார்கோவில் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியானார்.
நாய் குறுக்கே பாய்ந்தது
காளையார்கோவில் அருகே உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை. இவரது மகன் முருகன் (வயது 31). இவர் காளையார்கோவிலில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனது 1½ வயது மகனுடன் மானாமதுரையில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காளையார்கோவிலில் இருந்து மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லங்குடி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.