முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் மரணம்

முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2020-12-26 18:47 GMT
கடம்பூர் ஜனார்த்தனன்
கடம்பூர் ஜனார்த்தனன்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். முன்னாள் மத்திய மந்திரியான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91.

அவரது உடல் அடக்கம் சொந்த ஊரான கடம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

குடும்பம்
மறைந்த கடம்பூர் ஜனார்த்தனத்துக்கு ராமத்தாய் என்ற மனைவி இருந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இ்ல்லை. இதனால் கடம்பூர் ஜனார்த்தனன் தனது தம்பி மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

கடம்பூர் ஜனார்த்தனன், சென்ைன மாநில கல்லூரியில் பி.எஸ்சி. படித்தவர். ஆரம்ப காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த அவர், கடந்த 1975-ம் ஆண்டு நெடுஞ்செழியன் தலைமையில் தொடங்கப்பட்ட மக்கள் தி.மு.க.வில் இணைந்து பணியாற்றினார்.

அ.தி.மு.க.வில் இணைந்தார்
பின்னர் 1977-ம் ஆண்டுஎம்.ஜி.ஆர். தலைமையில் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.வில் இணைந்தார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் நகர, ஒன்றிய, மாவட்ட பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய அவர், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் இருந்தார்.

கடந்த 1984-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர், 1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்்தலிலும் நெல்லை தொகுதியில் வென்றார்.

மத்திய மந்திரி
அதன்பிறகு 1998-ம் நடந்த நாடாளுமன்ற ேதர்தலிலும் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடம்பூர் ஜனார்த்தனன், மத்திய பா.ஜனதா அரசில் நிதித்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு மத்திய பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அ.தி.மு.க. வாபஸ் பெற்றதால் அவர் பதவி விலகினார்.

தொடர்ந்து அ.தி.மு.க.வில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தள்ளாத வயதிலும் அ.தி.மு.க. கூட்டங்களுக்கு தவறாமல் சென்று கட்சியினருக்கு ஊக்கமூட்டி வந்தார். அவர் கடம்பூரில் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியை நடத்தி வந்தார். அந்த பள்ளிக்கூடத்துக்கு செயலாளராகவும் இருந்தார். மேலும் நூற்பாலையையும் நடத்தி வந்தார்.

மேலும் செய்திகள்