அரியலூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

அரியலூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Update: 2020-12-26 16:12 GMT
அரியலூர்,

அரியலூரில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அந்த வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெளியே வந்து கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் தசாவதார மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் காலை 8 மணிக்கு பின்னர் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி அளிக்கப்பட்டு முக கவசத்துடனும், சமூக இடைவெளியுடனும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரவு 8 மணி வரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, சுவாமி வீதி உலா நடைபெறவில்லை.

இதேபோல் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் காலை 6.15 மணி அளவில் திறக்கப்பட்டு, அந்த வழியாக வீரநாராயண பெருமாள் வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் பெருமாளை வணங்கினர். கோவில் உள் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவில், சம்போடை கிராமத்தில் சொர்க்க பள்ளத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் முன்பு காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்