6 மாதத்துக்கு முன் மாயமானவர் வழக்கில் திருப்பம்: காதல் தகராறில் நண்பனை கொன்று உடல் வீச்சு - 2 பேர் கைது

காதல் தகராறில் நண்பனை கொன்று உடலை கழிமுக கால்வாயில் வீசியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-26 00:52 GMT
மும்பை,

மும்பை ஜோகேஸ்வரியை சேர்ந்தவர் ரவி சாபலே. இவர் கடந்த ஜூன் மாதம் முதல் காணாமல் போய் இருந்தார். இது தொடர்பாக பெற்றோர் போலீசில் காணாமல் போன ரவி சாபலேவை தேடி கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் முபாரக் சையத், அமித்சர்மா ஆகிய 2 பேர் போலீசில் சிக்கினர். இந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில் காணாமல் போன ரவி சாபலேவை கொலை செய்து கழிமுக கால்வாயில் வீசியதாக தெரிவித்தனர்.

போலீசில் பிடிபட்ட முபாராக் சையத் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்து உள்ளார். அவர் தனது காதலியை நண்பரான ரவி சாபலேவிடம் அறிமுகப்படுத்தி உள்ளார். நாளடைவில் முபாரக் சையத்துடனான தொடர்பை காதலி கைவிட்டதாக தெரிகிறது. மேலும் அவரின் நண்பரான ரவிசாபலேவிடம் பழகி வருவது தெரியவந்தது.

இதனால் அவர் மீது முன்விரோதம் கொண்ட முபாரக் சையத் தனது கூட்டாளி அமித் சர்மாவுடன் சேர்ந்து ரவிசாபலேவை கொலை செய்ய திட்டம் போட்டனர்.

இதன்பின்னர் சம்பவத்தன்று ரவி சாபலேவை ஆரேகாலனிக்கு வரவழைத்து உள்ளார். அங்கு 2 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவி சாபலே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கல்லால் சிதைத்து உடலை அங்குள்ள கழிமுக கால்வாயில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மேலும் கடந்த 6 மாதம் முன்பு கொலை செய்யப்பட்டு கழிமுக கால்வாயில் கிடக்கும் உடலை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்