கோவை அருகே பரபரப்பு; ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.27 லட்சம் கொள்ளை; காரையும் பறித்து சென்ற கும்பலுக்கு வலைவீச்சு

கோவை அருகே ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு காரையும் பறித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-12-26 00:22 GMT
கொள்ளை நடந்த நவக்கரை பகுதியில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூரை சேர்ந்தவர் அப்துல்சலாம் (வயது50). ரியல்எஸ்டேட் அதிபர். இவர் தனது கார் டிரைவர் சம்சுதீன் (42) என்பவருடன் தொழில் சம்பந்தமாக கோவைக்கு வந்தார்.

பின்னர் அவர் கேரளாவுக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தனது காரில் கோவை- பாலக்காடு ரோடு நவக்கரை நந்திகோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்தது. அந்த காரில் இருந்தவர்கள் திடீரென்று அப்துல் சலாம் சென்ற காரை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சம்சுதீன் காரை நிறுத்தினார்.

ரூ.27 லட்சம் கொள்ளை
உடனே மற்றொரு காரில் இருந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கும்பல் இறங்கியது. அவர்கள் வேகமாக வந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அப்துல்சலாம், டிரைவர் சம்சுதீன் ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல்சலாம் சத்தமிட முயன்றார். உடனே அந்த கும்பல் அப்துல்சலாம், சம்சுதீன் ஆகியோரை சரமாரியாக தாக்கி காரில் இருந்து கீழே தள்ளியது. இதையடுத்து அந்த கும்பல் காரில் இருந்த ரூ.27 லட்சத்துடன் காரையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றது.

போலீஸ் அதிகாரிகள் விசாரணை
இது குறித்து அப்துல்சலாம் கொடுத்த புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்களின் கார் கேரளா நோக்கி சென்றதாக அப்துல்சலாம் தெரிவித்தார்.

இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கண்காணிப்பு
இந்த கொள்ளை குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச்சென்ற கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார் கள். அப்துல்சலாம் வந்த காரின் பதிவு எண், கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்,ஆகியவை சோதனைச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறதா? என்று போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொள்ளையர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அப்துல்சலாமை தொழில் பயணம் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.27 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்