சென்னை விமான நிலையத்தில் கொச்சி விமானத்தில் திடீர் கோளாறு - 86 போ் உயிா் தப்பினர்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி செல்ல இருந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்துவிட்டதால் 86 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கொச்சிக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 81 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் தயாராக இருந்தனர். விமானத்தில் பயணிகள் ஏறி அமா்ந்ததும் விமானம் ஓடுபாதை நோக்கி செல்ல தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா்.
உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து விமானம் மீண்டும் நடைமேடைக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய என்ஜினீயர்கள் குழுவினர் முயன்றனா். ஆனால் உடனடியாக சரிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனா். மாற்று விமான மூலம் பயணிகளை கொச்சிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்துவிட்டதால் 86 போ் அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்கள்.