மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் ரத்து அறிவிப்புக்கு எதிர்ப்பு: விழுப்புரம், தாம்பரத்தில் நிறுத்தினால் அதிகம் பேர் பயணிப்பார்கள்; உடனடியாக பரிசீலிக்க வலியுறுத்தல்

மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரெயில் ரத்து அறிவிப்புக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முக்கிய நிறுத்தங்களான விழுப்புரம், தாம்பரத்தில் அந்த ரெயில் நின்று செல்லும் என அறிவித்தால் அதிகம் பேர் பயணிப்பார்கள் எனவும், இதை உடனடியாக பரிசீலிக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2020-12-25 21:33 GMT
மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரெயில்
தேஜஸ் சிறப்பு ரெயில்
கொரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ் மற்றும் ரெயில்களில் 60 சதவீதம் மட்டும் தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன.

வழக்கமான பல ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன. அத்துடன், பொதுப்பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டு, முன்பதிவு செய்தால் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் ரெயில்கள் இயங்குகின்றன. இதனால், ரெயில் நிலையங்களில் முன்பதிவு செய்திருந்து இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் உடல்வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே செல்ல முடியும்.

இந்தநிலையில், பகல் நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், மாலை 3 மணிக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயிலும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் உணவு தயாரிக்கும் பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இயக்கப்படும் ரெயில்களில் இந்த பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

ரத்து அறிவிப்பு
இதனால், பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவு மற்றும் தண்ணீரையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே, மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரெயிலில் பயணிகளின் கூட்டம் இல்லை என்று வருகிற 4-ந் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேஜஸ் ரெயிலுக்கு மற்ற ரெயில்களைவிட கூடுதல் கட்டணம் என்றாலும் நிறைய பேர் அதில் பயணித்தனர். இந்த நிலையில் அந்த ரெயில் ரத்து அறிவிப்பு பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

விழுப்புரம்-தாம்பரம்
இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-

தேஜஸ் ரெயிலை பயணிகள் வரத்து குறைவு என 4-ந் தேதி முதல் தென்னக ரெயில்வே நிறுத்த உள்ளது. இந்த ரெயிலில் சுமார் 4 பெட்டிகள் காலியாக செல்வது உண்மைதான்.

இதற்கு ரெயில்வே நிர்வாகம் தான் காரணமாகும். அதாவது, ரெயில் தற்போது கொடைரோடு, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. உணவு, குடி தண்ணீர் பாட்டில் வழங்கப்படுவதில்லை. ரெயில் நிலையங்களில் கடைகள் இல்லை.

மதுரையில் இருந்து புறப்படும் ரெயில் சென்னைக்கு இரவு 9 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் விழுப்புரம், தாம்பரத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என ரெயில் இயக்கப்பட்ட காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது ஊரடங்கு நேரத்திலாவது இந்த ரெயிலுக்கு தாம்பரத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்கி இருக்கலாம். தண்ணீர் பாட்டில், உணவுக்கு ஏற்பாடு செய்யலாம். ஆனால், பயணிகளுக்கான எந்த வசதிகளையும் செய்து தராமல், வரத்து குறைவு என பயணிகளை குறைகூறுவது நியாயமில்லை.

உடனடியாக பரிசீலிக்க வலியுறுத்தல்
இதே தேஜஸ் ரெயில் தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டால் விழுப்புரம், தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும். தனியாருக்கு கொடுப்பதற்கான முன்னோட்டமாக ரெயிலை நிறுத்த முடிவு செய்திருக்கலாம் என தோன்றுகிறது. பயணிகள் விரும்பும் வசதிகளை செய்து கொடுத்த பின்னரும், வரத்து குறைவாக இருந்தால், ரெயில் இயக்கத்தை நிறுத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இந்த விவகாரத்தில் உரிய கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அந்த ரெயில் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்