சுரண்டையில் பயங்கரம்; காதல் திருமணம் செய்த புதுப்பெண் படுகொலை; தப்பி ஓடிய கணவருக்கு வலைவீச்சு

சுரண்டையில் காதல் திருமணம் செய்த புதுப்பெண்ைண படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-12-25 19:30 GMT
கொலை செய்யப்பட்ட பூங்கோதையுடன் கணவர் ஜோகிந்தர்
காதல் திருமணம்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள உச்சிபொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி. சலவை தொழிலாளியான இவருடைய மகள் பூங்கோதை (வயது 21). இவர் திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதே நிறுவனத்தில் மேற்பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் (27) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது, 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கு வேலை பிடிக்காமல் 2 பேரும் பூங்கோதையின் சொந்த ஊருக்கு அருகில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு வந்தனர். அவர்கள் சுரண்டை கோட்டை தெரு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கு ஜோகிந்தர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கழுத்தை நெரித்துக்கொலை
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோகிந்தர் துணியால் பூங்கோதை கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் காதுகளில் ரத்தம் வழிந்த நிலையில் பூங்கோதை தரையில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலையில் ஈடுபட்ட ஜோகிந்தர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாவியை கதவுக்கு அருகில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

நேற்று காலையில் வெகுநேரம் ஆகியும் பூங்கோதையின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கீழே கிடந்த சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றனர். அப்போது, அங்கு பூங்கோதை பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வலைவீச்சு
இதுகுறித்து உடனடியாக சுரண்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பூங்கோதை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப தகராறு காரணமாக பூங்கோதை படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் தப்பி ஓடிய ஜோகிந்தர் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சுரண்டையில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்