பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ 'சீட்' வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம்பெண்ணிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்,
வேலூர் தொரப்பாடி அரியூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ். இவரது மகள் ஸ்டெப்பி சிப்ரோள் (வயது 25) பி.எஸ்சி முடித்து விட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர் மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பினார்.
இந்த நிலையில் வேலூரில் தனியார் பள்ளியில் பணிபுரியும் பாகாயம் என்.கே.நகரை சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஸ்டெப்பி சிப்ரோளின் பெற்றோருக்கு அறிமுகம் ஆனார்.
அவர் தனது கணவரான சவுந்தர்ராஜன் (51) பலருக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்துள்ளார். அவருக்கு பல்வேறு இடங்களில் பிரமுகர்கள் பலர் பழக்கத்தில் உள்ளனர். எனவே அவர் உங்கள் மகளுக்கு வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கித் தருவார் என்று கூறினார்.
இதை நம்பிய இன்பராஜ், சவுந்தர்ராஜன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது சவுந்தர்ராஜன் பிலிப்பைன்ஸ் நாட்டில் உங்கள் மகளுக்கு மேற்படிப்பு படிக்கவைக்க மருத்துவ சீட் வாங்கி தருகிறேன் என உறுதியளித்தார்.
இதை நம்பிய இன்பராஜ் 6 தவணைகளாக ரூ.5 லட்சம் வரை கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி ஸ்டெப்பி சிப்ரோள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 3 நாட்கள் தங்கிய ஸ்டெப்பிசிப்ரோள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு சென்று கேட்டபோது தற்போது சேர்க்கை நடைபெறவில்லை என்று மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டெபி வேலூர் திரும்பி வேலூர் திரும்பினார்.
பின்னர் இன்பராஜ், சவுந்தர்ராஜனிடம் பணத்தை திரும்ப கேட்கவே அவர் கொடுக்கவில்லை. இதனால் அவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி செய்த சவுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெளிநாட்டில் என்னை, தங்க வைத்து உணவு கொடுக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். அவர் மீதும், இதில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவரது தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் இலக்குவன், கவிதா மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சவுந்தர்ராஜன் பண மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவர் மனித உரிமைகள் ஆணைய நிர்வாகி மற்றும் பத்திரிக்கையாளர் என ஏமாற்றியதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.