சோழவரம் கிராமத்தில் மாடு விடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி கலெக்டர் பார்வையிட்டார்
சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியப் பகுதியில் வேளாண்மைத்துறை, தோட்டக் கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, வேர்க்கடலை, பப்பாளி மற்றும் பட்டு வளர்ச்சி கூடம், பண்ணை குட்டைகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் தேசிய மானாவாரி மேம்பாட்டு இயக்கம் சார்பில் மானியத்தில் பண்ணை குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருவதை பார்வையிட்டார்.
ஆண்டிற்கு 2 முறை மீன்களை பிடித்து வேலூர் மீன் அங்காடிக்கு அனுப்புவதன் மூலம் ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக மீன் வளர்ப்பு உரிமையாளர் தெரிவித்தார்.
சோழவரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள 11 நாட்டு இன காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் காளைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் தீவன வகைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
கணியம்பாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள கடலை, உளுந்து நெல் போன்ற விதைகள் இருப்பு குறித்தும், நுண்ணுயிர் ஊட்டச்சத்து இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் உழவர் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் செய்வது குறித்து, விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீக்சித், செயற்பொறியாளர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், உதவி இயக்குனர்கள் கலைசெல்வி, மணிகண்டன், தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.