நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவருடைய சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2020-12-25 11:22 GMT
ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து வைகை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் அவரது உருவப் படத்திற்கு ஒன்றியக்குழு தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒன்றிய குழு துணைத்தலைவரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான வரதராஜன், நகர செயலாளர் முத்து வெங்கட்ராமன், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன், ஒன்றிய பொருளாளர்கள் மரிக்குண்டு செல்வம், லோகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கண்டமனூர் மற்றும் கடமலைக்குண்டு ஆகிய கிராமங்களில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கடமலை-மயிலை (வடக்கு) ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கொத்தாளமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரா சந்தோஷம், ஒன்றிய துணைச்செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் நவநீதன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூடலூரில் 21 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு நகரசபை முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான அருண்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவைத் தலைவர் துரை, துணைச் செயலாளர் பாலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் நகரசபை தலைவர் சின்னமாயன், பொருளாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அ.தி.மு.கவினர் மவுன ஊர்வலம் சென்றனர்.

போடியில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வி.ஆர்.பழனிராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக திருவள்ளுவர் சிலை பகுதிக்கு வந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் போடி பஸ் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

இதேபோல் அ.ம.மு.க. சார்பில் போடி நகர செயலாளர் எஸ்.ஞானவேல் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து, போடி பஸ் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுரேஷ் பேரூர் செயலாளர் வஜ்ரவேல், ஒன்றிய இணைச் செயலாளர் அழகாபுரி ஜெயகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி வெற்றிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து கட்சியினர் ஊர்வலமாக சென்று வைகை சாலை பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது வேலப்பர் கோவிலில் உள்ள பழங்குடியின மக்கள் 15 பேர் ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர். 

மேலும் செய்திகள்