தமிழகம் முழுவதும் விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரிகள் 2 பேர் அதிரடி கைது

தமிழகம் முழுவதும் விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரிகள் 2 பேரை விழுப்புரம் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2020-12-25 05:20 GMT
விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டபோதிலும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறுக்கு வழியில் விரைவாக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி பலர் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றனர். இதில் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பலரும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதியை லாட்டரி சீட்டு வாங்கி செலவழிக்கிறார்கள். இதனால் கடன் தொல்லைக்கு ஆளாகி அவர்கள் வேறு வழியின்றி குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி அருண், லாட்டரி சீட்டு மோகத்தில் பணம், நகை, வீடு உள்ளிட்டவற்றை இழந்து இறுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 3 குழந்தைகளுக்கும் பாலில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் தன்னுடைய மனைவியுடன் தானும் சேர்ந்து அதனை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிறப்பு தனிப்படை

இதுபோன்ற குடும்ப தற்கொலைகளுக்கு வழிவகுக்கும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பலை போலீசார் கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தொடர்ந்து, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழும் சிறையில் அடைத்து வருகின்றனர். இருப்பினும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மாவட்டத்தின் பல இடங்களில் இன்னும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிரு‌‌ஷ்ணன் உத்தரவின்பேரில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்த முகவர்கள் 23 பேரை ஒரே நாளில் கைது செய்தனர்.

மொத்த வியாபாரிகள் சிக்கினர்

இவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில் லாட்டரி சீட்டு விற்பனை கும்பலுக்கு மொத்த வியாபாரியாக சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த முருகநாதன் (வயது 50), அவரது மேலாளர் சையத்ஒலி (47) ஆகியோர் செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும், சென்னை தாம்பரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார், சென்னைக்கு விரைந்து சென்று முருகநாதன், சையத்ஒலி ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் அழைத்து வந்து தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தாலுகா போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

பரபரப்பு தகவல்கள்

பிடிபட்ட முருகநாதனும், சையத்ஒலியும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு பெரும் தலையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகவர்களை நியமித்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவரின் மூலமாக நியமிக்கப்பட்ட முகவர்கள், பொதுமக்கள் பலரிடம் பேராசையை தூண்டிவிட்டு அவர்களிடம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து பணத்தை கறந்துள்ளனர். பொதுமக்களும் பேராசையில் லாட்டரி சீட்டுகளை வாங்க தொடங்கினர்.

இதன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை சூடுபிடிக்கும் பகுதியில் கூடுதலாக முகவர்களை நியமித்து மேலும் லாட்டரி சீட்டு விற்பனையை அதிகரித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு ரூ.3 கோடி வரை லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறு விற்றால் லாபமே ரூ.1 கோடி கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயித்து முகவர்களை, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட வைத்துள்ளனர். இதில் அதிகளவு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் முகவர்களுக்கு கமி‌‌ஷன் தொகையையும் அவர்கள் உயர்த்தி கொடுத்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ரூ.4¾ லட்சம் பறிமுதல்

இதையடுத்து முருகநாதன், சையத்ஒலி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் 7 மடிக்கணினிகள், 3 உயர்ரக செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்ததன் அடிப்படையில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?

இதையடுத்து முருகநாதன், சையத்ஒலி ஆகிய இருவரையும் காவலில் எடுத்து போலீசார், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்கு இவர்கள் இருவருக்கும் யார், யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்