நாகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு

நாகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.

Update: 2020-12-25 03:18 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அனைத்து மாவட்டங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை மாவட்டத்திற்கு வந்தது. நாகை நுகர் பொருள் சேமிப்பு கிடங்கில், வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆய்வு

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,511 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. இதற்காக 1,890 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக இந்த எந்திரங்களுக்கு பார்கோட் சரிபார்க்கப்படும். இதைத்தொடர்ந்து பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து வரும் பொறியாளர்கள், வருவாய் துறையினருடன் எந்திரத்தில் ஏதேனும் பழுது இருக்கிறதா? என ஆய்வு செய்ய உள்ளனர்.

தயார் நிலை

இந்த பணி அடுத்த மாதம்(ஜனவரி) 10-ந் தேதிக்குள் முடிவடைந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, தேர்தல் தாசில்தார் பிரான்சிஸ் உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்