காசி மீதான பாலியல் வழக்குகளில் ஓரிரு தினங்களில் குற்ற பத்திரிகை தாக்கல்; வெளிநாட்டு நண்பரின் பாஸ்போர்ட்டை முடக்கவும் போலீசார் நடவடிக்கை
காசி மீதான 3 பாலியல் வழக்குகளில் ஓரிரு தினங்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். வெளிநாட்டு நண்பரின் பாஸ்போர்ட்டை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காசி வழக்கு
நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல பெண்களுடன் பழகியுள்ளார். பின்னர் அவர் பெண்களை தனது ஆசைவலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு அதனை ரகசியமாக வீடியோ எடுத்ததோடு அதை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக காசி மீது சென்னை பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் என்ஜினீயர் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம்பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் காசி மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில் ஒரு வழக்கு கந்துவட்டி மிரட்டல் வழக்கு ஆகும்.
இந்த வழக்குகள் தொடர்பாக காசி கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதவிர வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கப்பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காசி மீதான அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் காசி மீது சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் காசி மீதான வழக்குகள் எண்ணிக்கை மொத்தம் 7 ஆக உயர்ந்தது.
குற்ற பத்திரிகை
இதைத் தொடர்ந்து காசி மீதான கந்துவட்டி வழக்கில் முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மீதமுள்ள பாலியல் வழக்குகளிலும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்காக கூடுதல் ஆதாரங்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது காசி மீது கூறப்பட்டிருந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தன. அவரது லேப்-டாப்பை சென்னையில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து அதில் அழிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் அதிகமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை மீட்டனர். அதைத் தொடர்ந்து புதிதாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் போலீஸ் காவலில் காசி கூறிய வாக்குமூலம் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு காசி மீதான 6 பாலியல் வழக்குகளில் குற்ற பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயார் செய்து வந்தனர்.
ஓரிரு தினங்களில்...
அவற்றில் தற்போது 3 பாலியல் வழக்குகளுக்கான குற்ற பத்திரிகை தயார் நிலையில் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். அதாவது கடைசியாக சென்னை மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் பெண் என்ஜினீயர் கொடுத்த புகார் மீதான வழக்கு மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவி அளித்த புகார் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கு ஆகிய 3 வழக்குகளில் குற்ற பத்திரிகை தயார் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த குற்ற பத்திரிகை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, பின்னர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எப்படியும் ஓரிரு தினங்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
பாஸ்போர்ட்டு
மேலும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள காசியின் மற்றொரு நண்பரை பிடிக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் தற்போது வரை அவர் பிடிபடவில்லை. எனவே வெளிநாட்டு நண்பரின் பாஸ்போர்ட்டை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.