தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா விரைவில் அறிவிக்கும்; மதுரையில் எல்.முருகன் பேட்டி

“தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா விரைவில் அறிவிக்கும்” என்று மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

Update: 2020-12-24 23:11 GMT
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன்
ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு நேற்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக பா.ஜனதா சார்பில் ஆயிரம் இடங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதுதொடர்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. 2-ம் கட்டமாக விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

பா.ஜனதா எப்போதும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள், பா.ஜனதா குறித்து பொய்பிரசாரம் செய்து வருகின்றன.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வெற்றி அடையவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. மேலும் தி.மு.க. வெளியிட்ட கடந்த 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமாக விளை பொருட்களை எந்த பகுதியிலும் விற்பனை செய்யலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது அதே சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததால், அதனை வேறுவிதமாக பேசி வருகின்றனர்.

முதல்-அமைச்சர் வேட்பாளர்
நாட்டின் பிரதமரை எஸ்றா சற்குணம் தி.மு.க. கூட்டங்களில் ஒருமையில் பேசுவது கண்டிக்கத்தக்கது. அதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பா.ஜனதா சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து பா.ஜனதா தலைமை விரைவில் அறிவிக்கும். தமிழக அரசு பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு ரூ.2500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்