கோவையில் டெங்கு பரவலை தடுக்க "அபேட்" மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்
கோவையில் டெங்கு நோய் தடுப்பு பணியாக வீடு, வீடாக அபேட் மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கை
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், பொதுஇடங்கள் போன்ற இடங்களுக்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அபேட் மருந்து
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. அதே போல் வீடுகளுக்கு சென்று அங்கு டிரம், குடம், தண்ணீர் தொட்டிகள் போன்ற இடங்களில் டார்ச் அடித்து கொசு புழுக்கள் உள்ளதா? என தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர் அதில் அபேட் மருந்து சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின் படி தெளிக்கப்படுகிறது, ’’ என்று கூறினார்.