மக்கள் பணிக்கு வந்துள்ளதை மறந்து சிலர் செயல்படுகிறார்கள்; புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை
மக்கள் பணிக்கு வந்துள்ளதை மறந்து சிலர் செயல்படுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
நுகர்வோர் தினவிழா
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் நுகர்வோர் தினவிழா வள்ளலார் சாலையில் உள்ள பிரின்ஸ் ஹாலில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் வழங்கல்துறை துணை இயக்குனர் கங்காபாணி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தன்னார்வ நுகர்வோர் அமைப்பாளர்களை கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆன்லைன் வர்த்தகம்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ராஜீவ்காந்தி கொண்டு வந்தார். நுகர்வோருக்கு தரமான பொருட்கள் உரிய விலையில் கிடைக்க அதை கொண்டுவந்தார். 2019-ம் ஆண்டில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க மாவட்ட, மாநில அளவில் மையங்கள் உள்ளன. புதுவை நுகர்வோர் மையங்களுக்கு விரைவில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காணவும் முயற்சிக்கவேண்டும்.
நுகர்வோர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட நுகர்வோர் அமைப்புகள் உதவி செய்யவேண்டும். துறையும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பலர் தரம் தாழ்ந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு விலையை குறிப்பிட்டு பொருட்களை வழங்கும்போது கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். தரம் குறைந்த பொருட்களையும் சில நேரங்களில் தருகின்றனர்.
மறந்து செயல்படுகின்றனர்
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை இருக்க இந்த சட்டம் வந்தது. அமைச்சர் கந்தசாமியின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
அரசியல் சட்டத்தின்படி மக்களால் அரசு தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களுக்கு நன்மை செய்யத்தான். மக்கள் பணிக்குத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்களும், கவர்னரும் உள்ளோம். ஆனால் அதை மறந்து சிலர் செயல்படுகின்றனர்.
நாங்கள் பதவியேற்றதும் 6 மாதம் நல்ல தரமான இலவச அரிசி வழங்கினோம். ஆனால் அரிசி வழங்கக்கூடாது பணம்தான் வழங்கவேண்டும் என்று கவர்னர் தடுத்துவிட்டார். மக்கள், பணம் போட்டால் என்ன செய்வது? எங்களுக்கு அரிசிதான் வேண்டும் என்று கேட்கிறார்கள்.
மாற்றிக்கொள்ள வேண்டும்
தற்போது கொரோனா காலத்தில் விழாக்கள் கூடாது என்று கவர்னர் கூறுகிறார். இந்த காலத்தில் வர்த்தகம், விவசாயம், எதுவும் நடக்கவில்லையா? அதிகாரிகள், அரசு பணியாளர்கள் என யாரும் பணி செய்வதில்லையா? பள்ளி, கல்லூரிகளை திறந்துள்ளோம். சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கையில் நாம் தலையிடக்கூடாது.
விழா நடத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. புத்தாண்டை விதிமுறைக்கு உட்பட்டு கொண்டாடலாம். ஒருசிலர் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் நலனுக்காகத்தான் நாம் உள்ளோம். அவர்களுக்கு தொல்லை கொடுக்க அல்ல. அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.