கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு; அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆய்வு
கோவில்பட்டியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுவதை அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.;

அமைச்சர்கள் ஆய்வு
கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள இடத்தில் ரூ.1.70 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சிமையம் அமைய உள்ளது. இதற்கான இடம் தேர்வு நேற்று நடந்தது.
கால்நடை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்வு செய்தார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சம்பத், கோவில்பட்டி உதவி இயக்குனர் டாக்டர் சங்கரப்பன் ஆகியோர் சென்றனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டியில் கால்நடை பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இங்கு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும், தேவையான பயிற்சி அளிப்பதற்கும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை பொருத்தவரை கால்நடை பராமரிப்பு துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்தாண்டும் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அனுமதி வழங்கி தடையின்றி நடைபெற முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக எந்தெந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்ததோ அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்து எங்கள் துறைக்கு அனுப்புவார்கள்.
மருத்துவர்கள் தேர்வு
தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எந்த நோய் வந்தாலும் அதனை கட்டுப்படுத்த தயார் நிலையில் கால்நடை பராமரிப்பு துறை உள்ளது. கால்நடை மருத்துவமனைகளை பொருத்தவரை கடந்தாண்டு 900 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்தாண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆரை பழித்து பேசிய எவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. சீமான் போன்றவர்கள் எம்.ஜி.ஆர். பற்றி பேச தகுதி இல்லை. நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார், நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயாரா?. மனசாட்சிபடி நடிகர் கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும், நாங்களும் சொல்ல தயராக இருக்கிறோம் என்றார்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.