முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது
மோட்டார் சைக்கிளில் சென்றவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றதாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையை சேர்ந்தவர் கிஷோர் கர்தாக். இவருக்கு அண்மையில் ரபிக் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சல்மான் சையத்(வயது34) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சல்மான் சையத் அவர் மீது முன்விரோதம் கொண்டார். அவரை பழிவாங்க தகுந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று கிஷோர் கர்தாக் கோவண்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். இதைக்கண்ட சல்மான் சையத் தனது ஆட்டோவில் அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார்.
பின்னர் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோவை வேகமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதில் கீழே விழுந்த கிஷோர் கர்தாக் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரி்ன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சல்மான் சையத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.