வாணியம்பாடி பாலாற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் தவறி விழுந்து பலி
வாணியம்பாடி பாலாற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் ஊராட்சிக்குட்பட்ட நடுபட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ராஜன் (வயது 24). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிக்கச் சென்றார்.
மழை ெவள்ளம் வருவதற்கு முன்பே கொள்ளையர்கள் பாலாற்றில் பல இடங்களில் 20 அடி, 30 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி மணல் எடுத்திருந்தனர். மழை வெள்ளம் வந்தபோது பள்ளங்களில் நீர் நிறைந்திருந்தது. பள்ளம், மேடு தெரியாமல் ஓரிடத்தில் நின்றிருந்த ராஜன் கால் தவறி திடீரெனத் தண்ணீரில் விழுந்து விட்டார். அவரை, அங்கிருந்தவர்கள் பார்த்து ஓடி வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை காணவில்லை.
இதுகுறித்து வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 3 மணி நேரம் தேடலுக்குப் பின் ராஜனை பிணமாக மீட்டனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்காக ராஜனின் உடலை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.