ஊழல் புகார் குறித்து ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு போட தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
ஊழல் புகார் குறித்து ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு போட வேண்டியதுதானே? என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) கவர்னரை சந்தித்து தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் மீது 98 பக்க புகார் பட்டியலை அளித்துள்ளார்.
ஏற்கனவே தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட சில என்.ஜி.ஓ. அமைப்புகள் மூலம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கவர்னரிடம் அளித்த மனுவில் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால் நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அனுமதி கேட்டோம், அவர்கள் தாமதப்படுத்துகிறார்கள், ஆதலால் நீங்களே நேரில் தலையிட வேண்டும் என்று கவர்னரிடம் கூறியுள்ளனர். முழுக்க, முழுக்க பொய் என்பதற்கு இது உதாரணம்.
இதேபோல் பாரத் நெட் டெண்டர் வழக்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மற்றொரு குற்றச்சாட்டையும் கூறியுள்ளனர். இன்னும் அதற்கு டெண்டர் எடுக்கவே இல்லை. நடக்காத டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும். விடப்படாத டெண்டரில் முறைகேடு செய்துள்ளதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் தி.மு.க.வினர், மக்களை ஏமாற்றி அவர்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
துணை முதல்-அமைச்சரின் மகன் கார் வாங்கியது என்ற மற்றொரு குற்றச்சாட்டையும் கூறியுள்ளனர். அவர், பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில்தான் கார் வாங்கியுள்ளார், அவர், அவரது தந்தை வீட்டில்தான் இருப்பார், வேறு எங்கு இருப்பார், உங்கள் மகன் உதயநிதி உங்கள் வீட்டில் தானே இருக்கிறார். உதயநிதி கடந்த 2007-ல் ஹம்மர் கார் வாங்கினார். ஸ்டாலின் வீட்டு முகவரியில் தானே அவர் கார் வாங்கினார். அப்போது உங்கள் தந்தை கருணாநிதி முதல்-அமைச்சர், நீங்கள் துணை முதல்-அமைச்சராக இருந்தீர்கள். அப்போது என்ன செய்தீர்கள்? அப்போதிருந்த மன்மோகன்சிங் அரசு, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த காரை வாங்கியதாக அதனை பறிமுதல் செய்தது. இதுவரை அந்த வழக்கு என்னவாயிற்று. என்றைக்காக இருந்தாலும் அந்த வழக்கு தோண்டி எடுக்கப்படும். ஏன் அமைச்சர், துணை முதல்-அமைச்சரின் மகன் யாரும் தொழில் ஆரம்பிக்கக்கூடாதா? உங்களுடைய மகன், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் இல்லையா? காலாவதியான மருந்துகளை சந்தையில் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாயை உங்கள் மருமகன் சபரீசன் கொள்ளையடிக்கவில்லையா?
தி.மு.க.வின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு நீதிமன்றங்களில் 368 வழக்குகள் உள்ளன. 22 முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டும் ஊழல் வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், மோசடி வழக்குகள் என 83 வழக்குகள் உள்ளன. பெரியசாமி மீது 4 வழக்குகளும், மு.க.அழகிரி மீது 3 வழக்குகளும், ராஜா மீது 3 வழக்குகளும், பொன்முடி மீது 10 வழக்குகளும், செந்தில்பாலாஜி மீது 9 வழக்கும், தயாநிதிமாறன், துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், எ.வ.வேலு ஆகியோர் மீது தலா 2 வழக்கும், நேரு மீது 3 வழக்கும், அனிதா ராதாகிருஷ்ணன் மீது 7 வழக்கும், செங்குட்டுவன், பொங்கலூர் பழனிசாமி, ராமசாமி, தங்கம்தென்னரசு, கே.பி.பி.சாமி, பூங்கோதை, தமிழரசி, அன்பரசன் ஆகியோர் மீது தலா ஒரு வழக்குகளும், உங்கள் (ஸ்டாலின்) மீது 15 வழக்குகளும் உள்ளது. அதில் பல அவமதிப்பு வழக்குகள் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம்.
அதுபோல் தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள், ஊழல் வழக்கு என 100 வழக்குகள் உள்ளன. இதுதவிர முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் மீது 75 வழக்குகள் உள்ளது.இவர்கள் எங்களை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அ.தி.மு.க.விற்கு நேர் எதிரி தி.மு.க., தி.மு.க.வை அழிப்பதற்காகவே அ.தி.மு.க. இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் எங்களது கொள்கை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. அ.தி.மு.க.வை மக்கள் ஆதரித்து வருகின்றனர். வரக்கூடிய தேர்தலிலும் எங்களை ஆதரிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மனதில் கொண்டு ஏற்கனவே 2, 3 ஆண்டுகளாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை நாங்கள் நீதிமன்றம் சென்று முடிந்து போன வழக்குகளை புதிய குற்றச்சாட்டு போல கவர்னரிடம் கொடுத்துள்ளனர்.வழக்குகளை நடத்துவதை விட்டுவிட்டு வழக்கு இருக்கும்போதே கவர்னரை சந்திக்க சென்றதன் உள்நோக்கம் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த விசாரணை அறிக்கையை பிரிக்கக்கூடாது என்று ஏன் வழக்காடுகிறீர்கள்? எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் அடிப்படை முகாந்திரம், ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு போட வேண்டியதுதானே? எந்த வழக்காக இருந்தாலும் அதை தைரியமாக சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. எத்தனை பொய் வழக்குகளை போட்டாலும் நாங்கள் அதை சந்திக்க தயார், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக கருணாநிதி, ஸ்டாலின்மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கை ஏன் நீங்கள் சந்திக்க மறுக்கிறீர்கள்? நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் அந்த வழக்கை சந்தியுங்கள், நியாயமான காரணத்தை சொல்லுங்கள், ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது இதேபோல ஏற்கனவே பா.ம.க. ஊழல் புகார் கொடுத்ததே என்று கேள்வி எழுப்பியதற்கு, புகார் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் புகாரில் முகாந்திரம் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார். தொடர்ந்து, பொங்கலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக அறிவித்தது கொள்ளையடித்த பணத்தில் இருந்து கொடுப்பதாக பா.ஜ.க.வை சேர்ந்த அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அப்படியானால் மத்திய அரசு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பது எதிலிருந்து கொடுக்கப்பட்டதாம் என்று அமைச்சர் கூறினார். மேலும் பச்சை துண்டு பழனிசாமி என்று ஸ்டாலின் கூறி வருகிறாரே? என்று கேள்வி எழுப்பிதற்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், 2 பைசா கேட்டு போராடிய 17 விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்கள் தான் தி.மு.க.வினர். விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது என்றார்.