ஊட்டி ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றம்
ஊட்டி ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ஊட்டி,
மத்திய அரசு நாடு முழுவதும் 100 இடங்களில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைத்து, தேசிய கொடி பறக்க விட உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் முன்பு 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் நடப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையம் முன்பு கடந்த செப்டம்பர் மாதம் கொடி கம்பம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக ரெயில் நிலையம் முன்பு உள்ள பூங்காவில் குழி தோண்டப்பட்டது. அப்போது தண்ணீ்ர் பெருக்கெடுத்து வந்தது. இதனால் பணியை முடிப்பது காலதாமதமானது.
தொடர்ந்து பணிகள் நடந்து வந்ததால், அங்கு 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது. அந்த கம்பத்தில் நேற்று முதல் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. நீலகிரியில் முதல் முறையாக 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கம்பத்தில் 6 மீட்டர் அகலம், 2 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பறக்கிறது. ஊட்டி நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் இந்த கொடிக்கம்பம் உள்ளது. கொடிக்கம்ப உச்சியில் இடிதாங்கி, எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி எப்போதும் பறந்து கொண்டே இருக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.