பெருந்துறை அருகே ரவுடி கொலை வழக்கில் நண்பர்கள் 4 பேர் கைது - மதுபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்
பெருந்துறை அருகே ரவுடி கொலை வழக்கில் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபோதை தகராறில் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெருந்துறை,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, நக்கலபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற முத்துப்பாண்டி (வயது 30). திருமணமான இவர் மனைவி இறந்ததால் தனது தாய் செல்வியுடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். ரவுடியான முத்துப்பாண்டி, சிமெண்ட் ஷீட்டு பொருத்தும் வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மகள்கள் 2 பேரும் மதுரையில் உள்ள அவர்களது பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்களை பார்ப்பதற்காக செல்வி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மதுரைக்குச் சென்று விட்டார். வீட்டில் முத்துப்பாண்டி தனியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, இரவு 10 மணி அளவில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் வீட்டுக்கு போகவில்லை. மறுநாள் பெருந்துறையில் இருந்து துடுப்பதி செல்லும் வழியில் முத்துப்பாண்டி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பெருந்துறை போலீசார் தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பித்து ஓட முயன்றனர். இதனால் போலீசார் துரத்தி சென்று 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 4 பேரும் முத்துப்பாண்டியின் நண்பர்களான பெருந்துறை மேக்கூர், சாராயக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்த அபிப் ரகுமான் (27), ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (23), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (33), அவருடைய தம்பி ஜெயச்சந்திரன் (31) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தாங்கள் 4 பேரும் சேர்ந்து முத்துப்பாண்டியை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதில் அபிப் ரகுமான் மீது பெருந்துறை போலீஸ் நிலையத்தில் 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
முத்துப்பாண்டியும், நாங்கள் 4 பேரும் சிமெண்ட் சீட் பொருத்தும் வேலை செய்து வந்தோம். அப்போது நாங்கள் நண்பர்கள் ஆனோம். இதைத்தொடர்ந்து 5 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். அதேபோல் சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துப்பாண்டி மற்றும் நாங்கள் 4 பேரும் பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினோம்.
இந்த நிலையில் எங்களுக்குள் மதுபோதை தலைக்கேறியது. இதில் நாங்கள் 4 பேரும் முத்துப்பாண்டியுடன் வாய் தகராறில் ஈடுபட்டோம். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து முத்துப்பாண்டியை கொலை செய்ய முடிவு செய்தோம். துடுப்பதி செல்லும் ரோட்டில் வைத்து, 4 பேரும் சேர்ந்து கத்தியால் முத்துப்பாண்டியின் கழுத்தில் சரமாரியாக குத்தினோம்.
இதில் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். கொலை நடந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாக இருந்து வந்தோம். இந்த நிலையில் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சுற்றித்திரிந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் 4 பேரும் கூறி உள்ளனர்.
பின்னர் அவர்களை போலீசார் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சபினா,4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் ஈரோடு கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.