சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மராட்டியத்தில் இருந்து தேனிக்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மராட்டியத்தில் இருந்து தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.;

Update: 2020-12-24 10:09 GMT
தேனி, 

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை முதல் தர பரிசோதனை செய்யும் பணிகள் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே வருகிற சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் இருந்து தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தேனியில் இருந்து தனித்துணை கலெக்டர் சிவசுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மராட்டிய மாநிலத்திற்கு சென்றனர்.

அங்கிருந்து 1,600 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,700 கட்டுப்பாட்டு கருவிகள், 1,020 வி.வி.பேட் எனப்படும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை தேனிக்கு ஒரு கன்டெய்னர் லாரியில் எடுத்து வரப்பட்டது. இந்த கண்டெய்னர் லாரி நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது.

பின்னர், அவை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், லாரியில் இருந்து இறக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 2 பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்