நெல்லையில் டாக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா தென்காசி, தூத்துக்குடியில் 10 பேர் பாதிப்பு

நெல்லையில் டாக்டர் உள்பட 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.;

Update: 2020-12-24 04:32 GMT
தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்த அரசு டாக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மேலும் பாளையங்கோட்டை யூனியன், மானூர், களக்காடு, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 196 ஆக உயர்ந்தது. இதில் 14 ஆயிரத்து 760 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 138 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி- தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக உயர்ந்தது.

கொரோனாவால் பாதிப்படைந்த ஒருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 8 ஆயிரத்து 163 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் தற்போது 36 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையிலும் 38 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 984 ஆக அதிகரித்தது. இதில் 15 ஆயிரத்து 760 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்