மாத ஊதியத்தை 5-ந் தேதிக்குள் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாத ஊதியத்தை 5-ந் தேதிக்குள் வழங்கக் கோரி தஞ்சையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-24 02:51 GMT
தஞ்சாவூர்,

தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் கூட்டுறவு கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபால் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

மாத ஊதியம்

ஆர்ப்பாட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு கடனுக்காக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள விடுப்பு சரண்டர் தொகையை உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 20 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள வாரிசு வேலையை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ், தரைக்கடை சங்க மாவட்ட துணைத் தலைவர் குருசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர்கள் பேர்நீதிஆழ்வார், செங்குட்டுவன், மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்