பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது: திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைப்பு - பொதுமக்களின் வசதிக்காக பயன்பாட்டிற்கு தயார்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தானியங்கி நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டதால், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
திருவள்ளூர்,
மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளுக்கு ரெயில் சேவை இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைக்கப்படாமல் இருந்தது.
இதை தொடர்ந்து வயதான முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் தண்டவாளங்கள் வழியாகவும், நடைமேம்பாலம் வழியாகவும் கடந்து சென்றதால் அவதியுற்று வந்தனர்.
மேலும், ரெயில் தண்டவாளங்களை கடக்கும்போது அவ்வபோது விபத்தில் சிக்கி இறந்தும் வந்தனர்.
இதன் காரணமாக நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து கடந்த ஆண்டு 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளுக்கு இடையே தானியங்கி நகரும் படிக்கட்டுகள் ரூ.3 கோடியே 50 ஆயிரம் மதிப்பீட்டில் துவக்கப்பட்டது.
தற்போது இந்த நகரும் படிக்கட்டுகள் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மேலும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சுரங்கப்பாதை மற்றும் நகரும் படிக்கட்டு இரண்டும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.