தனியார் குடோனில் ராட்சத இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
தனியார் குடோனில் உள்ள இரும்பு கதவு திடீரென சரிந்து விழுந்ததில் காவலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.;
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் ஓமக்குளம் அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு மின் வாரியத்துக்கு சொந்தமான உதிரிபாகங்கள் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த குடோனில் மணலியைச்சேர்ந்த பால்சதா (வயது 62) மற்றும் ராமகிருஷ்ணன் (55) ஆகிய 2 காவலாளிகள் வேலை செய்து வந்தனர்.
நேற்று காலை குடோன் வாசலில் இருந்த ராட்த இரும்பு கதவை திறக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கதவில் உள்ள சக்கரம் கழன்று சரிந்து விழுந்தது.
இதில் காவலாளிகள் இருவரும் ராட்சத இரும்பு கதவுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த ஊழியர்கள், சரிந்து விழுந்த இரும்பு கதவை தூக்கினர். ஆனால் காவலாளி பால்சதா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.ராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.