போலி முகநூல் கணக்கு தொடங்கியதுடன் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி - மர்ம நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரம்

போலி முகநூல் கணக்கு தொடங்கியதுடன், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா புகைப்படங்களை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக மர்மநபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

Update: 2020-12-23 19:10 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ரூபா. இவர், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதன் மூலம் பிரபலமானார். தற்போது கர்நாடக உள்துறை செயலாளராக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா இருந்து வருகிறார். இந்த நிலையில், அதிகாரி ரூபாவின் புகைப்படங்கள் முகநூலில் (பேஸ்புக்) பதிவிடப்பட்டுள்ளதாகவும், அவரது பெயரை பயன்படுத்தி பண மோசடி நடப்பதாகவும், அவருக்கு தகவல் வந்தது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த சிலர், அதிகாரி ரூபாவை தொடர்பு கொண்டு விசாரித்த போது தான், போலி முகநூல் பக்கத்தில், அவரது புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது குறித்து, ரூபாவுக்கு தெரியவந்தது. அதாவது முகநூலில் சகுலின் சவுத்ரி சர்மா என்ற பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அந்த முகநூலில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் ஏராளமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்த முகநூல் கணக்கு அதிகாரி ரூபா தான் தொடங்கி இருக்கிறார் என்று நினைத்து, பலர் நண்பர்களாகி இருந்தனர்.

அவ்வாறு முகநூல் மூலம் நண்பர்களானவர்களிடம் செல்போன் எண்ணை பெற்ற மர்மநபர், அதன்மூலம் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் தான் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துவதாகவும், அதற்கு தேவையான பணத்தை அனுப்பும்படியும் மர்மநபர் கூறி இருந்தார். இதனை நம்பிய பலரும் மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் முகநூலில் தனது புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், தனது பெயரை பயன்படுத்தி மோசடி நடப்பது பற்றி அறிந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த மோசடியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு மர்மநபரை கைது செய்ய தீவரம் காட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்