நாகர்கோவிலில் எரிந்த நிலையில் பிணம்: ‘தீப்பெட்டி தராததால் தொழிலாளியை தீர்த்து கட்டினோம்’ கைதான 5 பேர் வாக்குமூலம்

நாகர்கோவிலில் எரிந்த நிலையில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தீப்பெட்டி தராததால் தீ வைத்து கொன்றோம் என்று கைதான 5 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2020-12-23 04:46 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் இருளப்பபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58), தொழிலாளி. இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டுக்கு செல்வது இல்லை. தினமும் கிடைத்த வேலைக்கு சென்று விட்டு வாழ்க்கையை கழித்து வந்தார். இவர் இரவில் அப்பகுதியில் உள்ள கடைகள் அல்லது வீடுகள் முன் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதேபோல சம்பவத்தன்று இரவும் ஒரு வீட்டின் முன் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் மறுநாள் காலையில் சந்திரன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யாரோ மர்மநபர்கள் தீ வைத்து தொழிலாளியை கொன்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

5 பேர் கைது

அந்த ரீதியில் விசாரணையை தொடர்ந்தனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் சிலர் சந்திரனின் அருகே வந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ஒரு சிறுவன் உள்பட 5 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்தனர்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மதுபோதையில் இருந்த கும்பல், அப்பாவி தொழிலாளியை எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியது.

பின்னர் தொழிலாளியை கொன்றதாக மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த பாலாஜி (20), இளங்கேஸ்வரன் (19), லட்சுமணன் (20), பொன்ராஜ் (22) மற்றும் 15 வயதுடைய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை முன்விரோதம் காரணமாகவோ அல்லது பழி வாங்கும் நோக்கத்துடனோ நடக்கவில்லை. அதாவது தூங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி அவர்கள் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.

பரபரப்பு தகவல்

ஆனால் சந்திரன் தீப்பெட்டிக் கொடுக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை தீ வைத்து எரித்துள்ளார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீசாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

சந்திரன் கொலை வழக்கில் பிடிபட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாகர்கோவில் வந்துள்ளனர். பின்னர் இங்குள்ள ஒரு பிளா‌‌ஸ்டிக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

கைதானவர்களில் ஒருவரான பாலாஜி என்பவர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் தன் நண்பர்களான மற்ற 4 பேரை அழைத்துக் கொண்டு மதுக்குடித்துள்ளார். மதுபோதையில் வந்த அவர்கள் சாலை ஓரம் இருந்த மின் விளக்குகளை உடைத்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த சந்திரனை எழுப்பி தீப்பெட்டி கேட்டு தகராறு செய்துள்ளார்கள். அப்போது அவர் தரமறுத்துள்ளார். இதனால் அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி விட்டு அவருடைய வேட்டியில் தீ வைத்தனர். இந்த தீ சந்திரனின் உடலில் பற்றி எரிந்ததும் தப்பி விட்டனர்.

இதில் அவர் உடல் கருகி துடிதுடித்து இறந்து விட்டார். கொலை தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியபோது, 5 பேரும் அந்த பகுதியில் தான் இருந்துள்ளனர். மேலும் மதுரைக்கு தப்பிச் சென்றுவிடவும் திட்டம் போட்டுள்ளனர். எனினும் துரிதமாக செயல்பட்டதால் 5 பேரும் உடனடியாக பிடிபட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

சிறையில் அடைப்பு

இந்த தகவல்களை 5 பேரும் வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்