தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் "எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்போம்" முதல்-அமைச்சர் பேச்சு

“தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்போம்“ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-12-23 03:17 GMT
நெல்லை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், இன்று (புதன்கிழமை) சங்கரன்கோவிலில் நடைபெறுகின்ற அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் கலந்துகொள்ளவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார்.

நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்ற அவருக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் ராஜலட்சுமி உடன் இருந்தார். பின்னர் தொண்டர்கள் முதல்-அமைச்சரை வரவேற்றும், வாழ்த்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த ஜீப்பில் கே.டி.சி.நகர் பஸ் டெப்போ முன்பு இருந்து பாலம் வரை இருபுறமும் மக்கள் வெள்ளத்தில் கையை அசைத்துக் கொண்டு வந்தார். அவருடன் ஜீப்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வந்தனர்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம்

அப்போது திறந்த ஜீப்பில் நின்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

2021 சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்த தேர்தலில், எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா கண்ணை, இமை காப்பது போல் காத்து வந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் அளித்த திட்டம் மக்கள் மனதில் நீங்காமல் நிற்கிறது.

இந்த இயக்கத்தை தி.மு.க.வை போல எத்தனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து நின்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாம் தான் வெற்றி பெறுவோம். எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சி மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் வருகிற தேர்தலில் முறியடித்து தொடர்ந்து அ.தி.மு.க.தான் ஆளும் என்பதை நிரூபிப்போம்.

எதிர்க்கட்சிகளுக்கு பாடம்

இந்த நெல்லைக்கு நான் எத்தனை முறை வந்து உள்ளேன். இதுவரை எந்த முதல்-அமைச்சராவது இப்படி வந்து உள்ளார்களா? என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து, ஏழை எளிய மக்களோடு வாழ்க்கை நடத்தி உள்ளேன். எனக்கு உங்கள் பிரச்சினைகள் தெரியும். இதனால் தான் உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நான் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன்.

மு.க.ஸ்டாலின் இந்த அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு செய்ய பார்க்கிறார். இந்த அவதூறுக்கு எதிர்க்கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெறுவோம். எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., கிரு‌‌ஷ்ண முரளி என்ற குட்டியப்பா, மனோகரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நெல்லை மாவட்ட அவைத்தலைவர் சவுந்தர்ராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், இளைஞரணி செயலாளர் பால்துரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாணவரணி செயலாளர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி அமல்ராஜா, முத்துக்குட்டி பாண்டியன், அழகானந்தம், விஜயகுமார், முன்னாள் கவுன்சிலரும் மேலப்பாளையம் பகுதி அவைத் தலைவருமான ஆறுமுகம், நாங்குநேரி-ராதாபுரம் தாலுகா வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு கடன் சங்க தலைவர் முருகேசன், எஸ்.கே.எம். சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவம், ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் பரணி சங்கரலிங்கம், செவல் முத்துசாமி, முன்னாள் பணகுடி பேரூராட்சி தலைவர் லாரன்ஸ்,எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, ஒன்றிய செயலாளர்கள் பூவராகவன் என்ற பூவரசன், மலையன்குளம் சங்கரலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்