நடத்தையில் சந்தேகம்: மனம் உடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் கைது

தனது நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்ததால் மனம் உடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-23 02:01 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ெரயிலடி ஹாஜியார் நகரை சேர்ந்தவர் மாதவன்(வயது 37). இவர் கடலை மிட்டாய் வியாபாரி ஆவார். இவருடைய மனைவி ஆவுடையம்மாள்(34). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.. 12 வயதில் ஹரிணிதா என்ற மகள் உள்ளார்.

மாதவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மாதவன் மது அருந்தி விட்டு சந்தேகத்தின் பேரில் தனது மனைவி ஆவுடையம்மாளிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

தீக்குளிப்பு

இந்த நிலையில் கடந்த 20-ந்் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த மாதவன் வழக்கம்போல் ஆவுடையம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த ஆவுடையம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

தீ மளமளவென அவரது உடலில் பரவியதால் வேதனை தாங்காமல் ஆவுடையம்மாள் கூச்சலிட்டு கதறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகள் ஹரிணிதா ஓடி வந்து பார்த்தார். அப்போது தனது தாயார் தீயில் எரிவதை பார்த்து கதறி அழுதார்.

வாக்குமூலம்

அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து ஆவுடையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாஜிஸ்தி்ரேட்டு அப்துல்கனி தீக்காயம் அடைந்த ஆவுடையம்மாளிடம் வாக்குமூலம் பெற்றார். வாக்குமூலத்தில் ஆவுடையம்மாள், தனது கணவர் மாதவன் குடித்துவிட்டு சந்தேகத்தின் பேரில் தன்னிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆவுடையம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து ஆவுடையம்மாளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆவுடையம்மாளின் சகோதரர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 4-வது தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முப்பிடாதி(36) என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் மயிலாடுதுறை போலீசார் மாதவன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

கணவர் கைது

இந்த வழக்கு தொடர்பாக மாதவனை கைது செய்த போலீசார,் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்